குறள் (Kural) - 1008

குறள் (Kural) 1008
குறள் #1008
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

பொருள்
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!.

Tamil Transliteration
Nachchap Pataadhavan Selvam Natuvoorul
Nachchu Marampazhuth Thatru.

மு.வரதராசனார்

பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா

எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.

கலைஞர்

வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!.

பரிமேலழகர்

நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும். ('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அண்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

வறியவராலே விரும்பி வரப்படாத உலோபியின் செல்வம், ஊரின் இடையே நிற்கின்ற ஓர் நச்சுமரமானது, நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)நன்றியில் செல்வம் (Nandriyilselvam)