குறள் (Kural) - 10

குறள் (Kural) 10
குறள் #10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

பொருள்
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

Tamil Transliteration
Piravip Perungatal Neendhuvar Neendhaar
Iraivan Atiseraa Thaar.

மு.வரதராசனார்

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

கலைஞர்

வாழ்க்கை
எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி
தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

பரிமேலழகர்

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இறைவன் அடி (சேர்ந்தார்) - இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர்; பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - பிறவியாகிய பெரியகடலைக் கடப்பர்; சேராதார் நீந்தார் - அப்புணையைச் சேராதவர் அக்கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர். வீடுபேறுவரை கணக்கில் கழிநெடுங்காலம் விடாது தொடர்ந்து வருவதாகக் கருதப்படுதலின், பிறவியைப் பெருங்கடல் என்றார். பிறவி வாழ்வு எல்லையில்லாது தொடர்ந்துவரும் துன்பம் மிகுந்த நிலையற்ற சிற்றின்பமேயாதலால், அதனின்று விடுதலைபெற்று நிலையான தூய பேரின்பந்துய்க்கும் பிறவாவாழ்வைப் பெறும்வழியை இக்குறள் கூறுகின்றது. சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். பிறவியைப் பெருங்கடலாக உருவகித்து இறைவனடியைப் புணையாக உருவகியாதுவிட்டது ஒருமருங்குருவகம். புணை யெனினும் கலம் எனினும் ஒக்கும்.

மணக்குடவர்

பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்

புலியூர்க் கேசிகன்

இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu)