குறள் (Kural) - 764

குறள் (Kural) 764
குறள் #764
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

பொருள்
எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.

Tamil Transliteration
Azhivindri Araipokaa Thaaki Vazhivandha
Vanka Nadhuve Patai.

மு.வரதராசனார்

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

சாலமன் பாப்பையா

போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

கலைஞர்

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.

பரிமேலழகர்

அழிவு இன்றி - போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி - பகைவரால் கீழறுக்கப்படாததாய்: வழிவந்த வன்கணதுவே படை - தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை, 'கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு'. (பு.வெ.மா.வாகை,22) என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.)

புலியூர்க் கேசிகன்

மனத்தின் உறுதியிலே அழிவற்றதாய், பகைவரது வஞ்சனைகளுக்கு உட்படாததாய், வழிவழித் தொடர்ந்து வந்த வன்கண்மை உடையதாய் விளங்குவதே, சிறந்த படை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)படையியல் (Padaiyil)
அதிகாரம் (Adhigaram)படை மாட்சி (Pataimaatchi)