குறள் (Kural) - 760
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
பொருள்
அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.
Tamil Transliteration
Onporul Kaazhppa Iyatriyaarkku Enporul
Enai Irantum Orungu.
மு.வரதராசனார்
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.
சாலமன் பாப்பையா
நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும்.
கலைஞர்
அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.
பரிமேலழகர்
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு - நெறியான் வரும் பொருளை இறப்ப மிகப் படைத்தாரக்கு; ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள் - மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம். (காழ்த்தல்: முதிர்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின், 'ஒண்பொருள்' என்றும், ஏனை இரண்டும் அதன் விளைவாகலின் தாமே ஒருகாலத்திலே உளவாம் என்பார் 'எண்பொருள்' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
சிறந்த வழியோடு வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு, எண்ணப்படும் மற்றையவாகிய அறமும் இன்பமும் ஒருங்கே வந்து வாய்க்கும் பொருள்களாகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | கூழியல் (Koozhiyal) |
அதிகாரம் (Adhigaram) | பொருள் செயல்வகை (Porulseyalvakai) |