குறள் (Kural) - 758

குறள் (Kural) 758
குறள் #758
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

பொருள்
தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது.

Tamil Transliteration
Kundreri Yaanaip Por Kantatraal Thankaiththondru
Untaakach Cheyvaan Vinai.

மு.வரதராசனார்

தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா

தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.

கலைஞர்

தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது.

பரிமேலழகர்

தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை - தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று - ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும்.('கைத்து உண்டாக ஒன்று செய்வான்' எனக் கூட்டுக. 'ஒன்று'என்பது வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம்.குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைக் கண்டாற் போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)கூழியல் (Koozhiyal)
அதிகாரம் (Adhigaram)பொருள் செயல்வகை (Porulseyalvakai)