குறள் (Kural) - 756

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
பொருள்
வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.
Tamil Transliteration
Uruporulum Ulku Porulumdhan Onnaarth
Theruporulum Vendhan Porul.
மு.வரதராசனார்
இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.
சாலமன் பாப்பையா
வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம்.
கலைஞர்
வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.
பரிமேலழகர்
உறுபொருளும் - உடையாரின்மையின் தானே வந்துற்ற பொருளும்; உல்கு பொருளும் - சுங்கமாகிய பொருளும்; தன் ஒன்னார்த் தெறுபொருளும் - தன் பகைவரை வென்று திறையாகக் கொள்ளும் பொருளும்; வேந்தன் பொருள் - அரசனுக்கு உரிய பொருள்கள். (உறுபொருள்: வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉமாம். சுங்கம் - கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது. தெறுபொருள்: 'தெறுதலான் வரும் பொருள்' என விரியும். ஆறில் ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும் நெறி கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
உடையவர் இல்லாததாலே வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளும், வேந்தனின் உரிமைப் பொருளாகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | கூழியல் (Koozhiyal) |
அதிகாரம் (Adhigaram) | பொருள் செயல்வகை (Porulseyalvakai) |