குறள் (Kural) - 746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
பொருள்
போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.
Tamil Transliteration
Ellaap Porulum Utaiththaai Itaththudhavum
Nallaal Utaiyadhu Aran.
மு.வரதராசனார்
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா
உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.
கலைஞர்
போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.
பரிமேலழகர்
எல்லாப் பொருளும் உடைத்தாய் - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது. (அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார்.)
புலியூர்க் கேசிகன்
அகத்தாருக்குத் தேவையான எல்லாம் பொருள்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய், விளங்குவதே அரண்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரணியல் (Araniyal) |
அதிகாரம் (Adhigaram) | அரண் (Aran) |