குறள் (Kural) - 737

குறள் (Kural) 737
குறள் #737
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

பொருள்
ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.

Tamil Transliteration
Irupunalum Vaaindha Malaiyum Varupunalum
Vallaranum Naattirku Uruppu.

மு.வரதராசனார்

ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

சாலமன் பாப்பையா

ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.

கலைஞர்

ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.

பரிமேலழகர்

இருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம்.(ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

கீழ்நீரும் மேல்நீரும் என்னும் இருநீர் வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண்களும், ஒரு நாட்டிற்கு வேண்டிய உறுப்புக்களாம்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரணியல் (Araniyal)
அதிகாரம் (Adhigaram)நாடு (Naatu)