குறள் (Kural) - 734

குறள் (Kural) 734
குறள் #734
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

பொருள்
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

Tamil Transliteration
Urupasiyum Ovaap Piniyum Serupakaiyum
Seraa Thiyalvadhu Naatu.

மு.வரதராசனார்

மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

சாலமன் பாப்பையா

மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

கலைஞர்

பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

பரிமேலழகர்

உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.)

புலியூர்க் கேசிகன்

நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் வளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரணியல் (Araniyal)
அதிகாரம் (Adhigaram)நாடு (Naatu)