குறள் (Kural) - 732
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.
பொருள்
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.
Tamil Transliteration
Perumporulaal Pettakka Thaaki Arungettaal
Aatra Vilaivadhu Naatu.
மு.வரதராசனார்
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
சாலமன் பாப்பையா
மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.
கலைஞர்
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.
பரிமேலழகர்
பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின்மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது. (அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது.'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில் கிளி அக்கண் அரசண்மையோடு ஆறு'. இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள்'என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிகவிளைவதாயிற்று.)
புலியூர்க் கேசிகன்
பெரும் பொருள் பெருக்கத்தால் அனைவராலும் விரும்பத் தகுந்ததாகியும், கேடுகள் இல்லாததாகியும், மிகுதியான விளைச்சலை உடையதாகியும் விளங்குவதே, நல்ல நாடு
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரணியல் (Araniyal) |
அதிகாரம் (Adhigaram) | நாடு (Naatu) |