குறள் (Kural) - 61

குறள் (Kural) 61
குறள் #61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

பொருள்
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

Tamil Transliteration
Perumavatrul Yaamarivadhu Illai Arivarindha
Makkatperu Alla Pira.

மு.வரதராசனார்

பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

சாலமன் பாப்பையா

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

கலைஞர்

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

பரிமேலழகர்

பெறுமவற்றுள் - ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை - யாம் மதிப்பது இல்லை. ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பெறு மவற்றுள்-இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல - அறியத்தக்க நூல்களை அறியக்கூடிய பிள்ளைப்பேறு அல்லாத;பிற - வேறு சிறந்தவற்றை, யாம் அறிவதில்லை - யாம் அறிந்ததில்லை. அறிவு என்பது அறிவைத்தரும் நூலைக் குறித்தலால் கருமிய, (காரிய) வாகுபெயர். அறிந்த என்பது தேற்றம் பற்றிய காலவழுவமைதி. பெற்றோர், பேறுகாலம் என்னும் இருசொற்களும் பிள்ளைப் பேற்றின் தலைமையை எடுத்துக் காட்டும்.

மணக்குடவர்

ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை.

புலியூர்க் கேசிகன்

பெறுகின்ற செல்வங்களாகிய அவற்றுள், அறிவறிந்த மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாக, பிற எதனையும் யாம் கருதுவதில்லை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)மக்கட்பேறு (Pudhalvaraip Perudhal)