குறள் (Kural) - 52

குறள் (Kural) 52
குறள் #52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

பொருள்
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.

Tamil Transliteration
Manaimaatchi Illaalkan Illaayin Vaazhkkai
Enaimaatchith Thaayinum Il.

மு.வரதராசனார்

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா

நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.

கலைஞர்

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.

பரிமேலழகர்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. ('இல்' என்றார் பயன்படாமையின்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவியிடத்தில் இல்லாவிடின்; வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல் - அவனது இல்வாழ்க்கை வேறு செல்வத்திலும் அதிகாரத்திலும் எத்துணைச் சிறந்ததாயினும் சிறப்புடையதாகாது. 'இல்' என்றது பயனின்மையை, "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே". என்னும் பழமொழி இங்குக் கவனிக்கத் தக்கது.

மணக்குடவர்

குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.

புலியூர்க் கேசிகன்

இல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)