குறள் (Kural) - 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
பொருள்
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
Tamil Transliteration
Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanu?ryum
Theyvaththul Vaikkap Patum.
மு.வரதராசனார்
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
கலைஞர்
தெய்வத்துக்கென
எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில்
நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக
வைத்து மதிக்கப்படுவான்.
பரிமேலழகர்
50 வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப
ஞா.தேவநேயப் பாவாணர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - இவ்வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - இவ்வுலகத்தானேயாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான். இல்லறவாழ்க்கையில் தூய்மையாக வாழ்பவன் மக்களுட் சிறந்தவனாக இருப்பனாதலாலும், இம்மையிற் செய்த நல்வினைப் பயனை மறுமையில் தேவனாகித் தேவருலகத்தில் நுகர்வான் என்னும் நம்பிக்கையினாலும், 'வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். தெய்வம் என்றது வகுப்பொருமை.
மணக்குடவர்
இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.
புலியூர்க் கேசிகன்
உலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | இல்வாழ்க்கை (Ilvaazhkkai) |