குறள் (Kural) - 40

குறள் (Kural) 40
குறள் #40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

பொருள்
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

Tamil Transliteration
Seyarpaala Thorum Arane Oruvarku
Uyarpaala Thorum Pazhi.

மு.வரதராசனார்

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

சாலமன் பாப்பையா

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

கலைஞர்

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

பரிமேலழகர்

ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒருவற்குச் செயற்பாலது அறனே-ஒருவன் என்றுஞ் செய்யத்தக்கது நல்வினையே; உயற்பாலது பழியே-செய்யாது விடத்தக்கது தீவினையே. 'ஓரும்' ஈரிடத்தும் அசைநிலை. ஆயினும், முதற்காலத்தில் 'ஆராய்ந்தறியும்' என்று பொருள்படும் ஏவற்பன்மை அல்லது பெயரெச்சமாகவே அது வழங்கியிருத்தல் வேண்டும். பிரிநிலையேகாரம் பின்னுங் கூட்டப்பட்டது.

மணக்குடவர்

ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.

புலியூர்க் கேசிகன்

ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது எல்லாம் அறமே; அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)அறன் வலியுறுத்தல் (Aran Valiyuruththal)