குறள் (Kural) - 38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
பொருள்
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.
Tamil Transliteration
Veezhnaal Pataaamai Nandraatrin Aqdhoruvan
Vaazhnaal Vazhiyataikkum Kal.
மு.வரதராசனார்
ஒருவன்
அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு
வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
சாலமன் பாப்பையா
அறத்தை
செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால்,
அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
கலைஞர்
பயனற்றதாக
ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு
வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே
விளங்கும்.
பரிமேலழகர்
வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். (ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.
ஞா.தேவநேயப் பாவாணர்
வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது வீணாகக் கழியும் நாள் இல்லாவாறு ஒருவன் நாள்தோறும் அறத்தைச் செய்துவருவானாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் இவ்வுலகில் உடம்போடுகூடி வாழும் நாள் வரும் வழியை அடைக்குங் கல்லாகும். 'படாஅமை' இசைநிறை யளபெடை. வாழ்நாள் வழியடைத் தலாவது பிறவியை நீக்கி வீடுபெறுவித்தல்.
மணக்குடவர்
ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது.
புலியூர்க் கேசிகன்
செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அறம் செய்வானானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும் கல்லாகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | பாயிரவியல் (Paayiraviyal) |
அதிகாரம் (Adhigaram) | அறன் வலியுறுத்தல் (Aran Valiyuruththal) |