குறள் (Kural) - 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
பொருள்
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.
Tamil Transliteration
Atravar Enpaar Avaaatraar Matraiyaar
Atraaka Atradhu Ilar.
மு.வரதராசனார்
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
சாலமன் பாப்பையா
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.
கலைஞர்
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.
பரிமேலழகர்
அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள், மற்றையார் அற்றாக அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர். (இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவி யற்றவரென்று சொல்லப்படுவார் அதற்கேதுவாகிய அவாவற்றவரேயாவர்; மற்றையார் அற்றாக அற்றது இலர் - அவா மு ற் று ம் அறாது சில பொருள்களின் மேல் மட்டும் ஆசையற்றவர் அவற்றால்வருந் துன்பங்களற்றதல்லது பிறவியற்றவ ராகார். இதனால் அவாவறுத்தலின் சிறப்பு உடன்பாட்டு முகத்தாலும் எதிர்மறை முகத்தாலுங் கூறப்பட்டது.
மணக்குடவர்
பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்.
புலியூர்க் கேசிகன்
பற்று அற்றவர் என்பவர்கள் அவா அற்றவரே; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | அவா அறுத்தல் (Avaavaruththal) |