குறள் (Kural) - 363

குறள் (Kural) 363
குறள் #363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.

பொருள்
தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.

Tamil Transliteration
Ventaamai Anna Vizhuchchelvam Eentillai
Aantum Aqdhoppadhu Il.

மு.வரதராசனார்

அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

சாலமன் பாப்பையா

எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.

கலைஞர்

தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.

பரிமேலழகர்

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை - ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை, ஆண்டும் அஃது ஒப்பது இல் -இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பது இல்லை. (மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் மேன்மேல் நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பதில்லை என்றும் கூறினார். ஆகம அளவை போலாது காட்சி அளவை எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள்செல்வம் வகுத்து முன்கூறப்பட்டது. பிறவாமைக்கு வழியாம் எனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை - ஒரு பொருளின்மேலும் ஆசை கொள்ளாமை யொத்த சிறந்த செல்வம் இம் மண்ணுலகத்தில் இல்லை; ஆண்டும் அஃது ஒப்பது இல் - இனி இதனினுஞ் சிறந்ததாகச் சொல்லப்பெறும் விண்ணுலகத்திலும் அதையொப்பது ஒன்றுமில்லை. வேண்டாமை வீட்டுலகத்தைத் தருதலின் அதனை விழுச்செல்வமென்றார். கண்டறிந்த வுலக வுண்மை கேட்டறிந்த வுலகவுண்மையினுந் தெளிவாதலின் முற்கூறப் பட்டது.

மணக்குடவர்

அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை: அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை. இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது.

புலியூர்க் கேசிகன்

அவாவற்ற தன்மைபோலச் சிறந்த செல்வம் இவ்வுலகில் யாதும் இல்லை; எவ்விடத்தும் அதற்கு இணையானதான செல்வமும் யாதும் இல்லை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)அவா அறுத்தல் (Avaavaruththal)