குறள் (Kural) - 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
பொருள்
உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
Tamil Transliteration
Aiyunarvu Eydhiyak Kannum Payamindre
Meyyunarvu Illaa Thavarkku.
மு.வரதராசனார்
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
சாலமன் பாப்பையா
மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.
கலைஞர்
உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
பரிமேலழகர்
ஐயுணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம், மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு. (ஐந்தாகிய உணர்வு : மனம் , அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
மெய் உணர்வு இல்லாதவர்க்கு - மெய்யறிவைப் பெறாதவர்க்கு; ஐ உணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - புலன்களால் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் திரும்பித் தமக்கு வயப்பட்ட விடத்தும் , அதனாற் பயனில்லையாம். ஐந்தாகிய வுணர்வு ஐம்புலன்மேற் செல்லும் மனம். அதையெய்துதலாவது புலன்மேற் செல்லாதவாறு மடக்கி ஒருவழி நிறுத்தும் நிறை. சிறப்பும்மை எய்துதற் கருமையை யுணர்த்திற்று. இக்குறளாலும் மெய்யறி வுடையார்க்கே வீடு பேறென்று மெய்யறிவின் இன்றியமையாமை கூறப்பட்டது.
மணக்குடவர்
மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.
புலியூர்க் கேசிகன்
மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வுகளை எல்லாம் முறைப்படியே பெற்றுள்ள போதிலும் பயன் யாதும் இல்லை
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | மெய்யுணர்தல் (Meyyunardhal) |