குறள் (Kural) - 320

குறள் (Kural) 320
குறள் #320
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

பொருள்
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.

Tamil Transliteration
Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar
Noyinmai Ventu Pavar.

மு.வரதராசனார்

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

சாலமன் பாப்பையா

செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.

கலைஞர்

தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.

பரிமேலழகர்

நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம், நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார். ('உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் 'அதுவே', (சீவக. முத்தி 164) ஆகலின், நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்' என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நோய் எல்லாம் நொய் செய்தார் மேலவாம்- துன்பங்களெல்லாம் முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்தாரையே சார்வனவாம்; நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார்- ஆதலால், தம்முயிர்க்குத் துன்பம் வேண்டாதவர் பிறிதோர் உயிர்க்குத் துன்பஞ் செய்யார். "தன்வினை தன்னைச் சுடும்". "வினைவிதைத்தவன் வினை அறுப்பான்". ஆதலால் தன்னலம் பற்றியேனும் பிறருக்குத் தீமை செய்யாதிருக்க என்று படர்க்கையில் வைத்துக் கூறினார். இதில் அமைந்துள்ள அணி சொற்பொருட் பின்வருநிலை.

மணக்குடவர்

இக்காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம்: ஆதலால் இக்காலத்துப் பிறர்க்கு துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுபவர்.

புலியூர்க் கேசிகன்

துன்பம் தருவன எல்லாம் துன்பம் செய்தவரின் மேல் சென்று சேர்வன; ஆகவே, துன்பப்படாமலிருப்பதை விரும்புகிறவர் பிறருக்குத் துன்பம் செய்யாதிருப்பர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)இன்னா செய்யாமை (Innaaseyyaamai)