குறள் (Kural) - 32

குறள் (Kural) 32
குறள் #32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

பொருள்
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

Tamil Transliteration
Araththinooungu Aakkamum Illai Adhanai
Maraththalin Oongillai Ketu.

மு.வரதராசனார்

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

சாலமன் பாப்பையா

அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.

கலைஞர்

நன்மைகளின்
விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம்
தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

பரிமேலழகர்

அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவர்க்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்கவழியுமில்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதை மறந்து செய்யாது விடுவதினும் பெரிய கெடுதல்வழியு மில்லை. 'அறத்தினூஉங்கு' இன்னிசை யளபெடை. செய்யாமையாகிய எதிர்மறையொடு வேற்றுமைப் படுத்திக் காட்டற்கு, மேற்கூறிய உடன்பாட்டுச் சொல்லியத்தை (வாக்கியத்தை) வழிமொழிந்தார்.

மணக்குடவர்

ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

அறநெறியோடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மையானதும் இல்லை; அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)அறன் வலியுறுத்தல் (Aran Valiyuruththal)