குறள் (Kural) - 271

குறள் (Kural) 271
குறள் #271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

பொருள்
ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.

Tamil Transliteration
Vanja Manaththaan Patitrozhukkam Poodhangal
Aindhum Akaththe Nakum.

மு.வரதராசனார்

வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

சாலமன் பாப்பையா

வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.

கலைஞர்

ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.

பரிமேலழகர்

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும். (காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்சமனம் என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் 'படிற்று ஒழுக்கம்' என்றும் உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - பிறரை வஞ்சிக்கும் மனத்தை யுடையவனின் பொய் யொழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்-அவனுடம்பாய்க் கலந்துள்ள ஐம்பூதங்களும் கண்டு தம்முள்ளே எள்ளிச் சிரிக்கும். படிறு பொய். பிறர் காணவில்லை யென்று மறைவாகத் திருடும் திருடனின் திருட்டை, குறைந்த பக்கம் எங்கும் நிலைத்துள்ள நிலம் வளி வெளி என்னும் மூன்று பூதங்களேனும் தப்பாமற் காணும். ஆயின், கூடா வொழுக்கத்ததானது மனத்தின் பொய்த் தன்மையையும் மறைந்த காமவொழுக்கத்தையும் அவனுடற் கூறாகவும் ஐம் பொறிகளாகவுமுள்ள ஐம்பூதங்களும் காணுவதால், 'பூதங்களைந்தும்' என்றும், அவை அவனுக்கும் பிறர்க்கும் தெரியாமல் நகுவதால் 'அகத்தே நகும்' என்றும் கூறினார். இது மறை வொழுக்கத்திற்குத் தெய்வச்சான்றும் மனச்சான்றும் மட்டுமன்றிப் பூதச் சான்றும் உள்ள தெனக் கூறியவாறு. பிறரை ஏமாற்றுவதால் 'வஞ்சமனம்' என்றார்.

மணக்குடவர்

கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும், தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும். பூதங்களைந்தும் அவையிற்றின் காரியமாகிய பொறிகளை.

புலியூர்க் கேசிகன்

வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும் தம்முள்ளே சிரித்துக் கொண்டிருக்கும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam)