குறள் (Kural) - 241

குறள் (Kural) 241
குறள் #241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பொருள்
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.

Tamil Transliteration
Arutchelvam Selvaththul Selvam Porutchelvam
Pooriyaar Kannum Ula.

மு.வரதராசனார்

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

சாலமன் பாப்பையா

செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.

கலைஞர்

கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது.

பரிமேலழகர்

செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செல்வத்துள் செல்வம் அருள் செல்வம் - செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது அருளாகிய செல்வமே; பொருள் செல்வம் பூரியார் கண்ணும் உள - மற்றப் பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்திலும் உள்ளன. செல்வம் போன்ற பண்பைச்செல்வ மென்றார். உம்மை இழிவு சிறப்பு.

மணக்குடவர்

செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால். இஃது அருள்நிலை கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்; பொருள்களாகிய பிற வகைச் செல்வங்கள் எல்லாம் இழிந்தவரிடத்திலும் உள்ளனவே!

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)அருளுடைமை (Arulutaimai)