குறள் (Kural) - 128

குறள் (Kural) 128
குறள் #128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

பொருள்
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.

Tamil Transliteration
Ondraanun Theechchol Porutpayan Untaayin
Nandraakaa Thaaki Vitum.

மு.வரதராசனார்

தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

சாலமன் பாப்பையா

தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

கலைஞர்

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.

பரிமேலழகர்

தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தீச்சொற் பொருட்பயன் ஒன்றானும் உண்டாயின் - ஒருவன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றேனும் பிறர்க்கு உண்டாயின் ; நன்று ஆகாது ஆகிவிடும் - அவன் ஏற்கெனவே செய்துள்ள பிறவறங்கள் பயன்படாமற்போம் . சொற்குற்றம் பொய் , குறளை , கடுஞ்சொல் , பயனில் சொல் என நான்கு என்பர். " ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீய சொல்லின் பொருளைப் பயக்குமாயின் , நன்மை யாகாதாகியேவிடும் " என்னும் மணக்குடவ ருரை பொருந்துவதன்று .

மணக்குடவர்

ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும். இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.

புலியூர்க் கேசிகன்

தீய சொற்களாலே வந்தடைந்த பொருளாகிய நன்மை ஒன்றாயினும் ஒருவனிடம் இருந்தாலும், அதனால் எல்லா நன்மையும் இல்லாமற் போய்விடும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அடக்கம் உடைமை (Atakkamutaimai)