குறள் (Kural) - 120

குறள் (Kural) 120
குறள் #120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

பொருள்
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

Tamil Transliteration
Vaanikam Seyvaarkku Vaanikam Penip
Piravum Thamapol Seyin.

மு.வரதராசனார்

பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

சாலமன் பாப்பையா

பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

கலைஞர்

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

பரிமேலழகர்

பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம். (பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின்; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பிறவும் தம்போல் பேணிச் செயின்-பிறர் பொருளையுந் தம் பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம்-வாணிகஞ் செய்வார்க்கு நடுநிலையான நல்வாணிகமாம். "கொடுமேழி நசையுழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப நாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும்" (பட்டினப். 205-211) வாணிகம் கொள்வினையையும் விற்பனையையும் ஒப்பக் கருதுவதனாலும், பொய்க்குங் கொள்ளைக்கும் இடந்தராமையாலும், மொத்த வணிகர் சில்லறை வணிகர் கொள்வோர் ஆகிய முத்திறத்தார்க்கும் தீதுங்கேடுமில்லா நல்வாணிகமாம்.

மணக்குடவர்

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம், பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின். வாணிகம் - இலாபம்.

புலியூர்க் கேசிகன்

பிறர் பொருளையும் தமதேபோலக் கருதிக் கொண்டு ஒழுகுதல், வாணிகத்தைச் செய்வார்க்குரிய நல்ல வாணிக மரபாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)நடுவு நிலைமை (Natuvu Nilaimai)