குறள் (Kural) - 1118

குறள் (Kural) 1118
குறள் #1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

பொருள்
முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.

Tamil Transliteration
Maadhar Mukampol Olivita Vallaiyel
Kaadhalai Vaazhi Madhi.

மு.வரதராசனார்

திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

சாலமன் பாப்பையா

நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.

கலைஞர்

முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.

பரிமேலழகர்

(இதுவும் அது.) மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல ஒளி விடவல்லையேல் காதலை - இம்மாதர்முகம் போல யான் மகிழும் வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி ('மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்', என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.)

புலியூர்க் கேசிகன்

மதியமே! இப் பெண்ணின் நல்லாளின் முகத்தைப் போல நீயும் ஒளிவிடுவதற்கு வல்லமை உடையையானால், நீயும் என்னால் காதலிக்கப்படுவாய்! நீதான் வாழ்க!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)களவியல் (Kalaviyal)
அதிகாரம் (Adhigaram)நலம் புனைந்து உரைத்தல் (Nalampunaindhuraiththal)