குறள் (Kural) - 1107

குறள் (Kural) 1107
குறள் #1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

பொருள்
தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.

Tamil Transliteration
Thammil Irundhu Thamadhupaaththu Untatraal
Ammaa Arivai Muyakku.

மு.வரதராசனார்

அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா

அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.

கலைஞர்

தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.

பரிமேலழகர்

(இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது ) அம்மா அரிவை முயக்கம் - அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம்; தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்று - இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தம்தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும். (தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று)

புலியூர்க் கேசிகன்

தம் வீட்டிலிருந்து, தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமை போன்றது, அழகிய மாமை நிறம் உடையவளான இவளைத் தழுவிப் பெறுகின்ற இன்பம்!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)களவியல் (Kalaviyal)
அதிகாரம் (Adhigaram)புணர்ச்சி மகிழ்தல் (Punarchchimakizhdhal)