குறள் (Kural) - 1105

குறள் (Kural) 1105
குறள் #1105
வேட் ட பொழுதின் அவையவை
போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள்.

பொருள்
விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.

Tamil Transliteration
Vetta Pozhudhin Avaiyavai Polume
Thottaar Kadhuppinaal Thol.

மு.வரதராசனார்

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

சாலமன் பாப்பையா

நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.

கலைஞர்

விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.

பரிமேலழகர்

(தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது) வேட்ட பொழுதின் அவையவை போலுமே - மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவை தாமே வந்து இன்பஞ்செய்யுமாறு போல இன்பஞ் செய்யும்; தோட்டார் கதுப்பினாள் தோள் - எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைத்த கூந்தலின் யுடையாள் தோள்கள்.(தோடு: ஆகுபெயர். இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு,பாங்கற்கூட்டத்துக்கண் முன்னரே நிகழ்ந்திருக்க, பின்னரும் புதியவாய் நெஞ்சம் பிணித்தலின், அவ்வாராமை பற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.)

புலியூர்க் கேசிகன்

விரும்பியபொழுது அவையவை தரும் இன்பத்தைப் போல இன்பம் தருவன, மலரணிந்த கூந்தலை உடையவளான இவள் தோள்கள் தருகின்ற இன்பம்!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)களவியல் (Kalaviyal)
அதிகாரம் (Adhigaram)புணர்ச்சி மகிழ்தல் (Punarchchimakizhdhal)