குறள் (Kural) - 1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
பொருள்
கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!.
Tamil Transliteration
Kankalavu Kollum Sirunokkam Kaamaththil
Sempaakam Andru Peridhu.
மு.வரதராசனார்
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.
சாலமன் பாப்பையா
நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.
கலைஞர்
கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!.
பரிமேலழகர்
(இதுவும் அது.) கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும்.(தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும்,நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவுகொள்ளும்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், இனிப் 'புணர்தல் ஒருதலை'என்பான் 'செம்பாகம் அன்று, பெரிது' என்றும் கூறினான்.)
புலியூர்க் கேசிகன்
என்னை அறியாமல் என் மேல் நோக்குகின்ற இவள் அருகிய நோக்கமானது, காம உறவிலே சரிபாகம் ஆவதன்று; அதனிலும் மிகுதியானது ஆகும்
பால் (Paal) | காமத்துப்பால் (Kaamaththuppaal) |
---|---|
இயல் (Iyal) | களவியல் (Kalaviyal) |
அதிகாரம் (Adhigaram) | குறிப்பறிதல் (Kuripparidhal) |