குறள் (Kural) - 1085

குறள் (Kural) 1085
குறள் #1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

பொருள்
உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.

Tamil Transliteration
Kootramo Kanno Pinaiyo Matavaral
Nokkamim Moondrum Utaiththu.

மு.வரதராசனார்

எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

சாலமன் பாப்பையா

என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.

கலைஞர்

உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.

பரிமேலழகர்

(இதுவும் அது.) கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமையான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ? அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது.(இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில்பற்றி வந்த ஐயநிலை உவமம்.)

புலியூர்க் கேசிகன்

இளமைப் பருவத்தவளான இவளது பார்வை, வருத்தும் கூற்றமோ! பிறழும் கண்ணோ! மருளும் பிணையோ! இம்மூன்று தன்மையையும் தன்பால் கொண்டிருக்கிறதே!

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)களவியல் (Kalaviyal)
அதிகாரம் (Adhigaram)தகை அணங்குறுத்தல் (Thakaiyananguruththal)